நார்த்தாமலை
நார்த்தாமலை
புதுக்கோட்டை – திருச்சி பேருந்துத் தடத்தில் புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில்
உள்ளது. மேலமலை கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை,
பொம்மாடி மலை, மண்மலை, பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைகள் (குன்றுகள்) இங்கு
உள்ளன. ராம-ராவண, இலங்கைப் போரில் மாண்டுபோன வீரர்களை உயிர்ப்பிக்க வைக்க
வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்தபொழுது அதிலிருந்து சிதறிய
துகள்கள் இங்கு விழுந்து இக்குன்றுகள் உண்டாயின என்று ஒரு கர்ணபரம்பரைக் கதைக்
கூறுகிறது. ஆகையால் இம்மலைகளில் பல அருமையான மூலிகைகள் இருப்பதாகச்
சொல்லப்படுகிறது நாரதர் இங்கு தங்கி இருந்ததால் நாரதர் மலை என்று பெயர் வழங்கியதாக
பெங்களூர் ஸ்தல புராணம் கூறுகிறது.
நார்த்தாமலை
கி.பி.7 ம் நூற்றாண்டிலிருந்து 9 ம்
நூற்றாண்டு வரை பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது இவர்களது
மேலாண்மைக்குட்பட்டு முத்தரையர் என்னும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.
நார்த்தாமலை மேலமலையிலுள்ள பழியிலி ஈச்சுரம் குகைக்கோவில் மூன்றாம் நந்திவர்ம
பல்லவமன்னன் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 826 -849) விடேல் விடகு முத்தரையனின் மகன் சாத்தன் பழியிலி என்னும்
முத்தரைய குல குறுநில மன்னனால் கட்டப்பட்டது. நிருபதுங்கவர்மனின் 9 ம் ஆதியாண்டு
(கி.பி. 847-875)
கல்வெட்டு
ஒன்று இங்கு உள்ளது இப்பகுதியில் பின்பு பாண்டியர்களும், சோழர்களும் தங்களது
ஆதிகத்தை நிலைநிறுத்திக் கொள்ள போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். கி.பி. 9 ம்
நூற்றாண்டின் இறுதியில் விஜயாலய சோழன் தஞ்சாவூரில் சோழர்களின் ஆதிக்கத்தை மீண்டும்
நிலைநிறுத்திய போது இப்பகுதியும் அவனது ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள
ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டில் இவ்வூர் தெலுங்கு குலகாலபுரம் என்றும்
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டில் குலோத்துங்க சோழபட்டினம்
என்றும் அழைக்கப்படுகிறது.
கி.பி. 14 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், மதுரையில் சுல்தான்களின்
ஆட்சி ஏற்பட்டபோது இப்பகுதியும் அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்தது (மாலிக்காபூர்
நார்த்தாமலை வழியாக மதுரைக்கு சென்றதாகச் சொல்லப்படுவது குறித்த கருத்தாய்வுகளை
முன்பே கண்டோம்) மதுரையில் முஸ்லீம்களின் ஆட்சி முடிவுற்றதிலிருந்து இப்பகுதி விஜயநகரப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பில்
இருந்துவந்தது. பின்பு மதுரை நாயக்கர்களும் அதன்பின் பல்லவராயர்களும் ஆண்டு
வந்தனர் தொண்டைமான் மன்னர்கள் பல்லவராயர்களிடமிருந்து நார்த்தாமலையை தங்கள்
வசமாக்கிக் கொண்டனர் சிறு குன்றுகள் நிறைந்த இடமாக உள்ளதால் இப்பகுதியை ஆண்ட
மன்னர்கள் இப்பகுதியின் பாதுகாப்பிற்கான இராணுவ தளங்களை இங்கு வைத்திருந்தனர்.
குன்றுகளின் மேல் காவல் அரண்கள் இருந்தற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.
நார்த்தாமலையில்,
அக்காலத்தில் பெரும் வணிகர் பலர் வசித்து வந்தனர் இவர்கள் ஒரு குழுவாக இணைத்து
செயல்பட்டு வந்தனர் இக்குழுவிற்கு “நகரம்” என்று பெயர். கி.பி. 9-10 நூற்றாண்டுகளிருந்து
இந்த வணிகக் குழுவினர் உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் இந்த
வணிகக் குழுக்கள் கோயில்கள் குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றின் பாரமரிப்பிற்கான
மானியங்களைப் பெற்று அவற்றை நிர்வகித்து வந்ததோடு உள்ளூரில் வரி வசூலித்தல் போன்ற
ஊராட்சிப் பணிகளையும் செய்துவந்தன. புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து “ஐநூற்றவர்”
என்னும் பெருவணிகக் குழுவில் 1௦ நகரங்கள் அடக்கியிருந்தன. அவற்றுள்
நார்த்தாமலையும் ஒன்றாகும். ஆகவே இவ்வூர் நகரத்தார்மலை அல்லது நகரத்துமலை என்று
அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தாமலை என்று மருவியதாகவும் கூறுவர் இங்குள்ள
மேலமலையிலுள்ள விஷ்ணு குகைக்கோயில் “பதினென்பூமி வின்னகரம்” என்று
அழைக்கப்படுகிறது (வின்னகரம் – விஷ்ணு கோயில்)
நார்த்தாமலை
மேல மலையில் பழியிலி ஈச்சுரம், சமணற்குடகு (தற்போது விஷ்ணு கோயில்) ஆகிய
குகைக்கோயில்களும், விஜயாலய சோழீச்சுரம் என்னும் கட்டுமான கோயிலும் உள்ளன.
விஜயாலய சோழீச்சுரம்
விஜயாலய
சோழீச்சுரம் கோயில் தமிழக கோயில் கட்டிடக்கலை வரலாற்றில் ஏற்றமிக்கதொரு இடத்தைப்
பெறுகிறது இதுபோன்ற கலைப்பாணியில் அமைந்த கோயில் தமிழகத்தில் இது ஒன்றே! கோயில்
கட்டிடவகை நகரா, திராவிட, வேசரா என மூன்று வகைப்படும் தமிழகத்திலுள்ள கோயில்கள்
அனைத்தும் திராவிட கலைப்பாணியில் அமைந்தவை
என்று சொல்லப்படும்.
வேசரா
கலைப்பாணியில் விமானத்தின் சிகரம் வட்டமாக இருக்கும் இக்கலைப்பாணியை மகாபலிபுரம்
ரதங்களிலும் இவற்றின் அருகிலுள்ள வலயன்கட்டி
ரத்தத்திலும் ஓரளவு காணலாம். ஆனால் இக்கலைப்பாணியை விஜயாலய சோழீச்சுரம்
கோயிலில் முழுமை அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. கோயிலைச் சுற்றி பரிவார தேவதைகளுக்கு
ஆறு சிறு (ஏகதள) கோயில்கள் உள்ளன. எழாவது கோயிலின் அடித்தளம் மட்டும்
காணப்படுகிறது ஆரம்பத்தில் எட்டு கோயில்கள் இருந்திருக்க வேண்டும். கோயிலைச்
சுற்றி சுற்றுமதில் ஒன்றும் இருந்ததற்கான அடையாளங்கள்
உள்ளன.
மேற்கு
நோக்கியுள்ள விஜயாலய சோழீச்சுரம் 1240 சதுர அடிப்பரப்பில் முழுதும் கற்களினால் அமைந்த
கட்டுமானமாகும். உண்ணாழீகை (கருவறை)
வட்டமாக அமைந்துள்ளது. இது இந்து சாத்திர நூல்களில் கூறப்படுகிறது பிரணவ அல்லது
ஓங்கார அமைப்பை ஒத்ததாக உள்ளது இதுபோன்ற அமைப்பு தனிச்சிறப்பானது கருவறையைச்
சுற்றிவர பிறைவடிவிலான சிறு சுற்று வழி (பிரகாரம்) உள்ளது அதையடுத்து நான்கு
பக்கங்களிலும் (சதுரமான) சுவர் உள்ளது கருவறையில் லிங்கம் உள்ளது கருவறையின்
வெளிச்சுவற்றில் மாடங்கள் இல்லை (பொதுவாக 1௦ம் நூற்றாண்டு கோயில்களில் இதுபோன்ற
மாடங்கள் வைத்து அவற்றில் சிற்பங்கள் அமைப்பது வழக்கமாக இருந்தது)
கருவறைக்கு
முன்னால் அர்த்தமண்டபம் ஒன்று உள்ளது இம்மண்டபத்தை ஆறு தூண்கள் தாங்கி நிற்கின்றன
இந்த மண்டபத்தின் வாயிலில் வாயில் காப்போர் சிற்பங்கள் இரண்டு உள்ளன.
இச்சிற்பங்கள் பல்லவர்கால கோயில்களில் உள்ளவை போன்று கலையழகு மிக்கவை.
இக்கோயில்
விமானம் கல்லிலே கண்டதொரு எழில்கோலமாகும். இது நான்கு அடுக்குகளைக் கொண்டது
உட்புறம் கூடாக உள்ளது விமானத்தின் சிகரம் வட்டவடிவமானது விமானத்தின் மாடங்களில்
வீனாதார தட்சிணாமூர்த்தி, உமாமகேஸ்வரர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. கோயிலைச்
சுற்றியுள்ள சிற்றலாயங்கள் தற்போது
தொல்பொருள் துறையினரால் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.
அர்த்தமண்டபத்தில்
ஓவியங்கள் தீட்டபடிருந்தற்கான அடையாளங்கள் காணப்படுகின்றது. வடக்குச் சுவற்றின்
பைரவர் ஓவியம் மிகவும் அழிந்துபட்டிருப்பினும் எஞ்சியுள்ளது கி.பி. 16-17 ம் நூற்றாண்டின்
ஓவியக்கலைப் பாணிக்கு எடுத்துகாட்டாகத் திகழ்கின்றது.
கோயிலின்
துவாரபாலகர் சிற்பத்தின் பீடத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது அக்கல்வெட்டு
“ஸ்வஸ்தி
ஸ்ரீ சாத்தம் பூதியான
இளங்கோவதி
அரையன் எடுப்பித்த கற்றளி
மலை
இடித்தழிய மல்லன் விதுமன்
ஆயின
தென்னவன் தமிழதிரையன் புதுக்கு”
என உள்ளது இக்கல்வெட்டைக் கொண்டு
இக்கோயில் சாத்தம்பூதி என்ற இளங்கோவதி முத்தரையன் என்னும் சிற்றரசனால்
எடுக்கப்பட்டது என்றும், பின்பு மழையினால் இக்கோயில் அழிந்து போக மல்லன் விதுமன்
என்னும் தென்னவன் தமிழதிரையன் என்னும் முத்தரைய சிற்றரசன் புதுப்பித்தான் என்பதும்,
புதுபிக்கபட்டபோது இது கற்றளி (கற்கோயில்) என்றே அழைக்கப்பட்டது என்றும் தெரிந்து
கொள்கிறோம் கல்வெட்டில் குறிபிடப்பட்டுள்ள முத்தரைய சிற்றிரசர்களின் பெயர்களைக்
கொண்டு கல்வெட்டின் காலத்தை கணிக்க முடிகிறது இளங்கோவதி அரையன் என்பான் விடேல்
விடுகு முத்தரையன் எனக் கொள்ளலாம்! (கி.பி. 820-850) கோயிலைப்
புதுப்பித்த மல்லன் விதுமன், பழியிலி ஈச்சுரம் குகைக் கோயிலில் உள்ள கி.பி.886 ம் ஆண்டு
கல்வெட்டில் குறிப்பிடப்படும் மல்லன் அனந்தன் என்னும் மீனவன் தமிழதிரையனும்
உறவுமுறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆகவே இக்கோயில் கி.பி. 850 க்கு முன்பே (விஜயலாலய
சோழன் காலத்திற்கு முன்பே) கட்டப்பட்டதாகும்.
ஆனால்
இக்கோயில் “விஜயாலய சோழீச்சுரம்” என்று தற்போது அழைக்கபடுகிறது. இக்கோயிலுக்கு
எதிரே சமணற்குடகு என்னும் திருமால் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ள பாறையில்
மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து (கி.பி.1228) கல்வெட்டு ஒன்று உள்ளது (பு.க 282) இவ்வூர்
நகரத்தார் (வணிகர் குழுவினர்) உடையார்
விஜயாலய சோழீச்சுரம் உடைய நாயனார்
கோயிலில் வைகாசி திருவிழா
கொண்டாடுவதற்குக் கொடையளித்த செய்தி இதில் கூறப்படுகிறது. நார்த்தாமலை
மேலமலையில் உள்ள குகைகோயில் இரண்டினுள் ஒன்று வைணவக் கோயிலாகவும் மற்றது
பழியிலிஈச்சுரம் என்னும் பெயருடனும் விளங்குகிறது இவை தவிர அங்கு சிவபெருமானுக்கு
கோயில்கள் ஏதும் இல்லையாதலால் விஜயாலய
சோழீச்சுரம் என்னும் பெயர் இக்கோயிலையே சுட்டுவதாகவும் பாண்டியர் காலக் கல்வெட்டு 13 ம் சேர்ந்தது
எனினும் வழிவழியாக, விஜயாலய சோழீச்சுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு அப்பெயரே
நிலைத்துவிட்டதாக கருதலாம்.
பழியிலி ஈச்சுரம்
விஜயாலய
சோழீச்சுரம் கோயிலுக்கு முன்புள்ள பாறையில் குடையபட்டுள்ள சிறிய குகைக்கோயிலாகும்
இது. இது சிவனுக்குரியது ஒரே ஒரு சிறிய அறை மட்டும் உள்ளது. இந்த கோயிலுக்குரிய
லிங்கமும், அழகிய தோற்றம் கொண்ட துவாரபாலகர் சிற்பங்களும், புதையுண்டு போக அவை
கண்டுபிடிக்கப்பட்டு தற்போது குகையின் முன்புள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளன. இம்
மண்டப மேடையிலுள்ள கல்வெட்டு புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்றிற்கு
முக்கியமான செய்தியை அளிக்கிறது. இம்மண்டபத்தின் விளிம்பில் காணப்படும் கல்வெட்டு
(எண்.19) பல்லவ மன்னன் நிருபதுங்கவருமன் காலத்தாகும் (கி.பி. 855-896) இக்காலத்தில்,
நார்த்தாமலைப் பகுதியை ஆண்டுவந்த விடேல்விடுகு, முத்தரையன் மகன் சாத்தம்பழியிலி
இக்கோயிலை குடைவித்தான். அவனது பெயரால் இது பழியிலி ஈச்சுரம் எனப் பெயர் பெற்றது
சாத்தம்பழியிலியின் மகன் இக்குகைக்கு முன்பு முகமண்டபம், நந்தி மண்டபம், பலிபீடம்
ஆகியவற்றைக் கட்டினான். அவனது மகளும் தமிழதிரையன் மல்லன் ஆனந்தனனின் மனைவியுமான
பழியிலி சிறிய நங்கை இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடையளித்தாள் எனவும்
இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (மேலமலைக்கு கீழ்பகுதியிலுள்ள அருமைக் குளததை வெட்டியவனும்,
விஜயாலய சோழீச்சுரம் கோயிலைப் புதுப்பித்து கட்டியவனுமான மல்லன் விதுமன்
இக்கல்வெட்டு குறிப்பிடும் மல்லன் ஆனந்தனின் சகோதரனாக இருக்கலாம் எனக்
கருதப்படுகிறது) இக்கல்வெட்டு, பல்லவர்களின் கீழ் சிற்றரசராக இருந்த முத்தரையரின்
வரலாற்றைப் படிக்க பெரிதும் துணை செய்வதாக உள்ளது.
சமணர் குடகு
பழியிலி
ஈச்சுரம் குகைக்கு சற்று வடக்குப் பக்கத்தில் அதே குன்றில் மற்றுமொரு குகைக்கோயில்
உள்ளது. இது சமணர் குடகு என்று அழைக்கப்படுகிறது.
இது
முற்காலத்தில் சமணக் குகைக்கோயிலாக இருந்திருக்கலாம் தற்போது இது ஒரு வைணவக்
கோயில் குகையின் அர்த்தமண்டபத்தின் சுவற்றில் திருமாலின் உருவங்கள் பன்னிரண்டு
வடிக்கப்பட்டுள்ளன அனைத்தும் ஒரே மாதிரியாக காட்சியளிக்கின்றன. கேசவன், நாராயணன்,
மாதவன் கோவிந்தன் கிரிவிக்ராமன் வாமணன் அச்சுதன் ஸ்ரீதரன் பத்மநாபன், வாசுதேவன்
மதுசூதனன் என திருமாலின் பன்னிரண்டு பெயர்களைச் சிறப்பிக்க இச்சிலைகள்
வடிக்கபட்டிருக்கலாம்.
குகையின்
முன்பு பிற்காலத்தில் கட்டப்பட்ட ஒரு மண்டபம் இருந்து அழிந்துபட்டிருக்க வேண்டும்
தற்போது இந்த மண்டபத்தின் மேடை மட்டும் உள்ளது இந்த மேடையில் மூன்று பக்கங்களிலும்
யானைகள், பலவிதமான யாளிகள், காமதேனு போன்ற வியப்புமிகு சிற்பங்கள் எழில்
தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. இவற்றுள் “ஸ்பிங்கஸ்” எனப்படும் சிற்பம்
குறிப்பிடத்தகுந்தது. மனித முகமும், சிங்கத்தின் உடலும்கொண்ட இவ்வுருவம் எகிப்து
பாணி சிற்பமாகும் வணிக நிமித்தம் மேலைநாடுகளுக்குச் சென்று வந்த நமது முன்னோர்
அங்கிருந்த கலைப்பாணிகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர் என்பதற்கு இது
எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
ஆரம்ப
காலத்தில் சமணக் குகையாக இருந்த இக்குகை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
காலத்தில் (1228)
வைணவ
குகையாக மாற்றப்படிருக்க வேண்டும் என இங்குள்ள கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது
(பு.க 281) வைணவ கோயிலாக
மாற்றிய பின்பு மேற்சொன்ன விஷ்ணு
சிற்பங்கள் பன்னிரண்டும் வடிக்கப்பட்டிருக்க வேண்டும் இந்த குகை பதினென்பூமி
வின்னகரம் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.
தர்கா
மேல
மலையிலுள்ள கோயில்களுக்குச் சற்று தெற்கே மலையில் கீழ்நோக்கி குடைவிக்கப்பட்டுள்ள
ஒரு குகையில் முகமது மஸ்தான் என்னும் ஒரு முஸ்லீம் பெரியவரின் அடக்கத்தலம் (தர்கா)
உள்ளது. மலைக்குன்றில் கீழ்நோக்கி குடைந்து குகை எடுக்கப்பட்டிருப்பது
தனிச்சிறப்பாகும் இவர் சித்த வைத்தியத்திலும் சிறந்து விளங்கி இப்பகுதி மக்களிடம்
புகழ்பெற்று விளங்கினார் என்று சொல்லப்படுகிறது மாரியம்மன் கோவில் திருவிழாவின் 1௦
ம் நாள் இரவு இந்த தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான
முஸ்லீம் – இந்து மக்கள் மதபேதமின்றி அன்று தர்காவில் கூடி வழிபடுகின்றனர்.
நார்த்தாமலையிலுள்ள
மாரியம்மன் கோயில் மாவட்டத்திலுள்ள முக்கியமான வழிபாட்டுத் தலமாகும் மார்ச் –
ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மேலமலைக்கு
செல்லும் வழியிலுள்ள தலையருவி சிங்கம் சுனையின் கீழே ஜீரஹரேஸ்வரர் என்னும் லிங்கம்
ஒன்று உள்ளது 1857 –ல் ராஜா
ராமச்சந்திரத் தொண்டைமான் சுனையின் நீரை இறைக்கச்செய்து இந்த லிங்கத்திற்கு
வழிபாடு நடத்தியதாக சுனைக்கு அருகிலுள்ள கல்வெட்டுத் தெரிகிறது.
கோட்டை
மலையில் கோட்டை இருந்து அழிந்துபட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.
கடம்பர்
கோவில்
கடம்பர் மலை அடிவாரத்தில் திருக்கடம்பர் உடைய
நாயனார் கோயில் உள்ளது கருவறையையும் அர்த்தமண்டபத்தையும் கொண்ட இக்கோவில்
அமைப்பில் கண்ணனூர் பாலசுப்ரமணியர் கோயிலை ஒத்திருக்கிறது இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள்
காலத்தால் முற்பட்டது. ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாகும். மூன்றாம்
குலோத்துங்கச்சோழன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாம் ராஜேந்திர சோழன் மூன்றாம்
ராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் இக்கோயிலுக்கு புதிய கட்டுமானங்கள்
சேர்க்கபட்டதையும், புதுபிக்கபட்டதையும் குறித்த செய்திகள் தெரியவருகின்றன.
நார்த்தாமலையின் வரலாறு குறித்த செய்திகள் இங்குள்ள கல்வெட்டுகள் பெரிதும்
துணைபுரிகின்றன. ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு மற்றும், மாறவர்மன்
சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன. ராஜராஜசோழன்
காலத்து கல்வெட்டு மற்றும், மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள்
பத்தும் காணப்படுகின்றன நகரத்தார் எனப்படும் வணிகப்பெருமக்கள் இக்கோயிலுக்கு
அளித்த கொடைகள் பற்றிய செய்திகள் நிறைய தெரியவருகின்றன.
திருகடம்பர்
கோயிலுக்கு அருகில் நகரீச்சுரம் எனப்படும் மற்றொரு சிவன்கோயில் உள்ளது இது
மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி.1228-ல்) கட்டப்பட்டதாகும்.
கடம்பர்
மலையிலும் கோட்டை இருந்து அழிந்துபட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. கன்னிமரா
சுனை, பொழுதுபடா சுனை என இரண்டு சுனைகளும் இங்கு உள்ளன.
அக்காலத்தில்
கொடுங்குற்றம் செய்தோர், இங்குள்ள உயரமான ஒரு மலையிலிருந்து (ஆளுருட்டி மலை) கீழே
உருட்டிவிடப்பட்டு கொல்லப்பட்டதன் காரணமாக ஆளுருட்டி மலை என்று பெயர் பெற்றதாக
தெரியவருகிறது.
சுவாரஸ்யமான தகவல்கள். அழகிய படங்கள். படங்களை அந்தந்த விவரங்களுக்குக் கீழ் இணைத்திருக்கலாம். பார்க்க வேண்டிய இடம்.
ReplyDeleteநன்றி ஐயா!.. அவசரமாக போட்டுவிட்டேன் ஒரே இடமாக இருந்ததால்....மண்ணிக்கவும்
Deleteபடங்களுடன் விளக்கமான தகவல்கள்...
ReplyDeleteநம்ம விக்கிபீடியா தலைவரிடம் சொல்கிறேன்...
நன்றி...
கண்டிப்பா கூறுங்ககள் மிகவும் மகிழ்ச்சி ....
Deletenalla idangal superb ji
ReplyDeleteநன்றி ஜி
Delete